Sunday, January 30, 2011

ஈழப் பெண்ணின் ... இரத்தக் குளியல்

வா பெண்ணே வா...! நீ தான் வரனுக்காக ஏங்கி வடமேற்குத் திசைநோக்கி வாடித் தவம் கிடந்த வனிதையா?
என்ன செய்ய..?  உனக்கு நல்ல வரன் பார்த்தால்.. எங்கள் ஊர் நரியர்களுக்குப் பிடிக்காதே!
 பார்போற்றும் ராஜீவும் பாரிவள்ளல் எம்ஜியாரும் பார்த்த வரனைத்தான் நீகூடப் 
பரிகாசம் செய்தாயே!மாங்கல்யம் சூட்டுமுன்பே உன் உடம்பின் மச்சத்தை எண்ணிப் பார்க்க.....!எங்கள் ஊர் மாப்பிள்ளைகள் வந்தார்கள். 
ஆனால்,அது ,                                                                                                                                மரபல்ல என்றல்லவோ எங்கள் மாமனிதர் எம்ஜியார் மறுத்துச் சொல்லிவிட்டார்.
ஆனால், நீயும் அவர்கள்  மடியில்தான் மயங்கித் தவம் கிடந்தாய்!
அவர்கள் உன்னை மணக்கவா செய்தார்கள்? பாவம் உன்னை மானபங்கப் படுத்தினார்கள்.
உன் கையைக் கொண்டே உன் கண்ணைக் குத்தும் உத்தமர்கள்(!) இன்று எங்கள் ஊரின் உயர்பதவி நாயகர்கள்! 
வழக்கமாகப் பதவிக்கு வருமுன்பு உன்மேல் பரிதாபம் காட்டிப் பேசுவார்கள்.இங்கு,  பதவி மட்டும் கிட்டிவிட்டால்.......! உன்னைப் பார்ப்பதே பாவம் என்று பதுங்கிக் கொள்வார்கள்! 
உன் அழுகைச் சத்தம்தான் அவர்களுக்கு அமுத கானம்! 
பதவி வெறிபிடித்த இந்தப் பச்சோந்திகளை நம்பித்தான் நீயும் பல காலம் தவம் கிடந்தாய். 
இன்று, நீ சிந்திய ரத்தத்தால் இந்தியப் பெருங்கடலைச் சிவப்பாக்கிக் கொண்டிருக்கிறாய்!
 முக்கடலின் சங்கமத்துள் மூழ்கித் தவம் கிடக்கும் முத்தமிழ் நாயகியாம் உன்னை, ரத்தக் குளியலிலிருந்து மீட்பதற்காக எங்களின் இதய தெய்வம் பட்டபாடு கொஞ்சமல்ல. 
தத்துவப் படை ஒன்றுக்கு அவர் தலைமை ஏற்கும் முன்பே, தர்மதேவன் அவரைத் தன் உலகுக்கு அழைத்துக் கொண்டான்...! 
எங்கள் ஊர் இன்று, தறுதலைகளின் ஊழல் கைகளில் தவியாய்த் தவிக்கிறது.
செந்தமிழ் மணக்கும் சித்திரப் பதுமையாய் நின்ற உன்னைச் சிறை மீட்கத் துணிந்தவரும் சிரச்சேதம் ஆகிப் போனார்! நீயும் சீரழிவுக்கு ஆளானாய்! 
தினந்தினமும் உன்னைப் பற்றிப் பேசியே இங்கு செல்வச் சீமானாய் ஆனவர், இன்று சிரித்துச் சிரித்துப் பேசித் தன குடும்ப வாரீசுகளைச் சிகரத்தில் வைத்துக் கொஞ்சுகிறார். 
ஆனால், இவர்தான் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவுமே வாழ்கிறாராம்! 
நீயே நம்பினாய்! பின் என்ன, நாங்களும்தான் நம்பினோம்! 
ஆனால், ஒன்று...!
செந்தமிழ் நங்கை நீ சிந்திய ரத்தத் துளிகள், இந்த வங்கக் கடலிலிருந்து வடிகட்டப் படாதவரை, எங்களின் வாழ்வையும், வளத்தையும் களவாடிய இந்த வசன வியாபாரியின் வாழ்வாதாரம் அத்தனையும் திருடப்பட்டது என்பதையே இந்த வையகம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும். இது சத்தியம்!
                                                சோதிடப் புலவர் 
                                               ௨௮. ௧. ௨௦௧௧